Sunday, 5 July 2026

ஞாயிறு


நாளை அலுவலத்தில்
என்னென்ன செய்வது?
கொதிக்கும் குழம்பு போல
அங்கும் இங்குமாய்
எண்ணக் குமிழிகள்.
அவளது
ஞாயிற்றுக்கிழமையத்
தின்று கொண்டிருக்கிறது
திங்கள்கிழமை.

Saturday, 13 June 2026

அவரால் விடை பெற்றுப் போய்விட இயலாது



தாழக்குடி ஊரம்மன் கோயில் அருகே எழுபதுகளின் பிற்பகுதியில் வெள்ளை அம்பாசடரிலிருந்து இறங்கிய அந்த மனிதனை அன்று ஊர்க்காரர்கள் பலரும் அறிந்திருக்கவில்லை. தன் அகன்ற விழிகளால் கீழத்தெருவையும், தெற்குத்தெருவையும் அளந்தான் அவன். ஆயிரமாண்டுகளாய் நீண்டுகிடக்கிற பெருந்தெருக்களும், திட்டமிட்டு உருவாக்கிய குறுக்குத்தெருக்களும் கொண்டு மதுரையை நினைவுபடுத்தும் எங்கள் ஊர் அவனது மனதைப் பிசைந்துகொண்டிருந்த காதல் கதைக்குத் தோதாக இல்லை போலும். உதட்டைப் பிதுக்கியபடி வண்டியில் ஏற, தாடகைமலை நோக்கிப் போனது வண்டி. வீரகேரளப்பனேரி, புத்தனாறு, பழையாறு, குறத்தியறை தாண்டி கடுக்கரையில் நிலைகொண்டது அந்தக் காதல். விச்சுவும் மேரியும் விழிகளில் விழுந்து உயிரில் கலந்த கதை, திரை இலக்கியப் படிமங்களாக மாற்றம் பெற்றது அங்கேதான்.

எங்கள் மண்ணின் மணம் நிறைந்த அந்தத் திரைப்படத்தைத் திரையில் கண்டது இன்னும் மறக்க முடியாத நினைவு. காதலித்து அறிந்திராத ஒரு பதினாறு வயதுப் பையனுக்கு அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் கொடுத்த தாக்கம் எழுத்தில் வடிக்க இயலாதது. திரைப்படம் முடிந்து சித்தப்பா வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். மனதுக்குள் "உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்" என்று சசிரேகா பாடுவதும், அடுத்த நொடி ஒலி எதுவுமின்றி  அமைதியாகும் பாடல் அமைப்பும் மாறி மாறி வந்து போகின்றன. "என்னப்போ ஒரு மாதிரி இருக்க?" என்ற சித்தியின் கேள்விக்கு "ஒண்ணுமில்ல சின்னம்மா" என்ற பதில் மட்டுமே தர முடிந்தது. ஒண்ணுமில்லை என்ற சொல்லுக்குள் ஓராயிரம் சொற்கள். இதை எழுதுகின்ற இந்த நொடியில் கூட அந்த உணர்வுகளுக்குள் செல்ல முடிகின்றது என்பதுதான் இயக்குநர் பாரதிராசாவின் பெருவெற்றி.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் நெல்லை இரண்டடுக்குப் பாலத்தின் கீழ் நண்பனோடு நடந்துகொண்டிருக்கிறேன். ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு திருவில்லிப்புத்தூர் வண்டி ஏறவேண்டும். பேசிக்கொண்டே நடக்கையில் கண்ணில் பட்டது பாலத்துத் தூணில் ஒட்டப்பட்டக் கையகலச் சுவரொட்டி. அதைச் சுவரொட்டி என்று கூடச் சொல்ல இயலாது. சிறிய துண்டறிக்கைபோல "ரத்னா தியேட்டரில் நாளை முதல் பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள்" என அச்சிடப்பட்ட ஒருவண்ணத் தாள் அது. யாருடைய புகைப்படமும் அதில் இல்லை. ஆனால், பாரதிராசா என்ற பெயரே எங்களை நெல்லைச் சந்திப்பில் படுத்துறங்கச் செய்வதற்கும், ரத்னாவில் அலையலையாய்ப் பார்வையாளர்களை வரச் செய்வதற்கும் போதுமானதாக இருந்தது. முதல் நாள் நுழைவுச் சீட்டோடு 'காதல் ஓவியம்' என அச்சிடப்பட்டு வழங்கப்பட்டப் பேனாவை விட, 'முதல் மரியாதை'யின் வெட்டிவேரு வாசம் ஏற்படுத்தியிருந்தப் பெருந்தாக்கம் அது.

அந்தத் தாக்கத்தோடு தொண்ணூறுகளின் தொடக்கத்தில், மலையூர் மம்பட்டியான் படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவராம்தாசின் பரிந்துரையில் பாரதிராசாவிடம் உதவி இயக்குநராகத் தலைப்பட்டேன். ஆனால், வாழ்க்கைச் சக்கரம் எதிர்புறம் சுழன்றது. எப்பொழுதாவது நமக்குள்ளே நாம் தொலைந்துபோவோம். தொலைந்ததையே அறியாமல் இருக்கின்றபோது எங்கே தொலைந்தோம் என்பதைப் பட்டென்று நினைவுபடுத்தி விடுகிற காட்சிகள் அவர் படங்களில் மிகுதி. பலருக்கும் நிகழ்வதுதான் இது.

மீண்டும் தன்னை ஒரு சிறந்த இயக்குநராக அவர் நிலைநிறுத்திக் கொண்ட பொம்மலாட்டம், தனக்குப் பிடிக்காத, தன்னியல்புக்கு ஒத்துவராத கதை என்று சொல்லிக்கொண்டே 'பறவைக் கூட்டில் வாழும் மான்களை'ப் படமாக்கிய விதம் எல்லாம் வியக்கவைத்தது.

முதல்மரியாதையைப் பார்த்துவிட்டு நண்பன் உப்புக்கோட்டை எஸ்.வி.சேகரிடம் அவர் படித்த பள்ளிக்கூடத்தைப் பார்க்கவேண்டுமென்று சொல்லி தேனிக்குப் போனோம். நண்பனும் அந்தப் பள்ளியில் படித்தவன் தான். தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நாடகம் நிகழ்த்திய இடம், வகுப்பறை எல்லாம் பார்த்தோம். அவரது ஆசிரியர் (ஓய்வு பெற்றிருந்தார்) ஒருவரையும் பார்த்தோம். 

அவரது மறைவுச் செய்தி கேட்டது தொடங்கி ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்கையில் திகைப்பாக இருக்கிறது. எவ்வளவு உழைப்பு, உறுதி, துணிச்சல். இயக்குநராகத் தான் எண்ணியவற்றையெல்லாம் திரைக் காட்சிகளாய் நிகழ்த்திக் காட்டிய திடம். தெக்கத்தி மண்ணின் உணர்வுகளை, ஒப்பனைகளற்ற வாழ்வியலை, அவர்கள் வழக்காறுகளாலேயே காட்சிப் படிமங்களாய் மாற்றிய திறன்.

மறுபுறம் தமிழ்ச் சமூகத்தின் குரலாக, உரிமைகளுக்கான போராட்டக் களங்களில் ஒருவனாக, ஈழ விடுதலையைப் பேசிய குரலாக, திரைத்துறையில் தமிழ்க்குரலாக ஒலித்த இன்னொரு முகமும் கொண்டவன். 

எல்லாவற்றிற்கும், கீழே சிந்திய கண்ணீர்த் துளிகளும், மேலே பறந்த தோட்டாக்களும் அவரது இறுதிநாளில் சான்றாக நின்றன.

பெருவாழ்வு அவருடையது. அவர் ஆக்கிய வழித்தடங்கள் பலவுண்டு. அதில் பயணிப்போர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்தப் பாதைகளிலே நடந்து கொண்டிருப்பார்கள். அவர்களது வேறு வேறு கதைகளைக் காட்சிகளைப் பார்ப்போம். அதனுள் அவரது திரைமொழி எங்கேனும் மறைந்திருக்கும்..

ஆம். அவரால் விடை பெற்றுப் போய்விட இயலாது.

Wednesday, 10 June 2026

பாரதிராசா மறைவு


தமிழ்த் திரைமொழியை,
நீ
ஆழ அகல உழுதபின்தான்
செம்மண் காடுகளில்கூட
சந்தன மரங்கள் வளர்ந்தன.

பாம்படக் கிழவிகளின்
பல்லில்லா வாய்மொழியில்
பகடிகள் கேட்டன.

கஞ்சிக் கலயங்களில்
கசிந்த காதலைப்
பெருநகரங்கள்
அண்ணாந்து பார்த்தன.

கையறுநிலையில் வாழும்
தந்தையின்
குருதி வெப்பத்தைத்
தமிழ்நிலம் உணர்ந்தது.

முன்னேர் ஓட்டுவதற்குப்
பெருமுனைப்பு வேண்டும்.

ஊட்டி மலைகளில்
ஓடியாடிய
மேட்டுக் காதலை
ஆண்டிப்பட்டிச் சாலைகளில்
 அழைத்துவர
பேராற்றல் வேண்டும்.

வண்ணக் கனவாய்
வளைய வந்தத் திரைப்படத்தை
மண்ணின் அழுக்கோடு
மடியில் இருத்திவைக்க
மனம் நிறைந்த துணிவு வேண்டும்.

அத்தனையும் பெற்றவன் நீ.

நிலவின் அருகிருந்தப்
பெருங்கனவைத்
தலையணைக்கு அருகில்வைத்துத்
தட்டி எழுப்பியவன் நீ.

இன்று காணும்
நல்ல திரைப் பூக்கள் பலவும்
வேலிகளற்ற உன் தோட்டத்தின்
விளைச்சல்களே.

அந்தத்
தமிழ்த் திரை நிலத்தில்
அடியுரமாய்க் கலந்துவிட்டாய்.
அழியாப் பெருவாழ்வு
உனக்கு.
போய்வா ...

கண்ணீர் வணக்கம் 🙏

10-06-2026

Tuesday, 17 March 2026

சங்க இலக்கியத்தில் பண்டைத் தமிழர் வாழ்வியல் - நூல் மதிப்புரை

 



=======================================================
பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன் அவர்களின் "சங்க இலக்கியத்தில் பண்டைத் தமிழர் வாழ்வியல்" எனும் நூலுக்கு நான் எழுதிய மதிப்புரை 2026 மார்ச்சு மாத வையம் இதழில் வெளியாகியிருக்கின்றது.
நன்றி வையம் இலக்கிய மாத இதழ்.
=======================================================

சங்க இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்
நூல் மதிப்புரை - சிராப்பள்ளி ப.மாதேவன்

நூற்களுக்கு மதிப்புரை எழுதுவதென்பது நம்மை நாமே உரசிப் பார்த்துக்கொள்ளும் ஒரு முயற்சி என்றே கருதுகிறேன். வாசிப்பை, தேடலை விரிவுசெய்யும், புத்தாக்கம் செய்யும் வல்லமை பல நூற்களுக்கு உண்டு என்பதைப் பலவேளைகளில் உணர்ந்திருக்கிறேன். குமரிமாவட்டம், தோவாளையைச் சேர்ந்த பேராசிரியர் இராமசுப்பிரமணியன் அவர்களின் ‘சங்க இலக்கியத்தில் பண்டைத்தமிழர் வாழ்வியல்’ எனும் கட்டுரைத்தொகுதியும் அப்படியான ஒன்றே. இதுவே, தமிழில் பேரளவு எடுத்தாளப்பெற்ற தலைப்பாகவும் இருக்கக்கூடும்.

Sunday, 22 February 2026

Work Isn't Working - நூல் அறிமுகம்

 


 

இணையத்தில் ஓரங்க நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, அதன் பார்வையாளர்களைப் பார்க்கும் போது பெரு வியப்பாக, பாவமாக இருக்கும். “நீங்கள் ஒரு பூமர். உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்” என்று சொல்லிவிட்டு என்னை நீங்கள் கடந்து போகலாம். ஆனால், அது ஏனென்று சொல்லாமல் சொல்லிச் செல்கிறது இந்தப் புத்தகம். விட்டு விடுதலையாக வேண்டும் என்ற உங்கள் எண்ண உந்துதலின் அடிப்படையில் மறைந்து கிடக்கும் (எங்களுக்கு), நீங்கள் அறிந்தே அமிழ்த்தி வைத்திருக்கிற, அழுத்தம் நிறைந்த பலூனை உங்கள் மனக்குளத்தின் அடியாழத்திலிருந்து வெளிக்கொணர்ந்து சமூக வெளியில் மிதக்கவிடுகிறது இந்தப் புத்தகம். அது இயல்பும் கூட.

இந்தப் புத்தகம் வெறுமனே பெருநிறுவனங்களைப் பற்றியதா என்றால், அதை விட அங்கே இருக்கும் மனிதர்களைப் பற்றியே பெரும்பாலும் பேச முனைகிறது. அங்கே நிலவும் முன்முடிவுகளுடன் கட்டமைக்கப் பட்ட உரையாடல்களைப் பதம் பிரிக்கிறது. அந்தச் சொற்களுக்கு இடையே சிக்கிக் கொண்டவர்களின் மன உணர்வுகளைப் பொது வெளியில் பேசுகிறது. அது ஆசிரியரின் எண்ண ஓட்டம் மட்டுமல்ல, இன்னும் பலரின் மனக் குமுறல்களும், ஆற்றாமையும் கொண்ட தொகுப்பு. இவை அனைத்தையும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என  எள்ளலும், நகைப்பும், பகடியும், நக்கலும் குழைத்த எளிய மொழி நடையில் விளம்புகிறது. காட்டாக,