தாழக்குடி ஊரம்மன் கோயில் அருகே எழுபதுகளின் பிற்பகுதியில் வெள்ளை அம்பாசடரிலிருந்து இறங்கிய அந்த மனிதனை அன்று ஊர்க்காரர்கள் பலரும் அறிந்திருக்கவில்லை. தன் அகன்ற விழிகளால் கீழத்தெருவையும், தெற்குத்தெருவையும் அளந்தான் அவன். ஆயிரமாண்டுகளாய் நீண்டுகிடக்கிற பெருந்தெருக்களும், திட்டமிட்டு உருவாக்கிய குறுக்குத்தெருக்களும் கொண்டு மதுரையை நினைவுபடுத்தும் எங்கள் ஊர் அவனது மனதைப் பிசைந்துகொண்டிருந்த காதல் கதைக்குத் தோதாக இல்லை போலும். உதட்டைப் பிதுக்கியபடி வண்டியில் ஏற, தாடகைமலை நோக்கிப் போனது வண்டி. வீரகேரளப்பனேரி, புத்தனாறு, பழையாறு, குறத்தியறை தாண்டி கடுக்கரையில் நிலைகொண்டது அந்தக் காதல். விச்சுவும் மேரியும் விழிகளில் விழுந்து உயிரில் கலந்த கதை, திரை இலக்கியப் படிமங்களாக மாற்றம் பெற்றது அங்கேதான்.
எங்கள் மண்ணின் மணம் நிறைந்த அந்தத் திரைப்படத்தைத் திரையில் கண்டது இன்னும் மறக்க முடியாத நினைவு. காதலித்து அறிந்திராத ஒரு பதினாறு வயதுப் பையனுக்கு அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் கொடுத்த தாக்கம் எழுத்தில் வடிக்க இயலாதது. திரைப்படம் முடிந்து சித்தப்பா வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். மனதுக்குள் "உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்" என்று சசிரேகா பாடுவதும், அடுத்த நொடி ஒலி எதுவுமின்றி அமைதியாகும் பாடல் அமைப்பும் மாறி மாறி வந்து போகின்றன. "என்னப்போ ஒரு மாதிரி இருக்க?" என்ற சித்தியின் கேள்விக்கு "ஒண்ணுமில்ல சின்னம்மா" என்ற பதில் மட்டுமே தர முடிந்தது. ஒண்ணுமில்லை என்ற சொல்லுக்குள் ஓராயிரம் சொற்கள். இதை எழுதுகின்ற இந்த நொடியில் கூட அந்த உணர்வுகளுக்குள் செல்ல முடிகின்றது என்பதுதான் இயக்குநர் பாரதிராசாவின் பெருவெற்றி.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் நெல்லை இரண்டடுக்குப் பாலத்தின் கீழ் நண்பனோடு நடந்துகொண்டிருக்கிறேன். ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு திருவில்லிப்புத்தூர் வண்டி ஏறவேண்டும். பேசிக்கொண்டே நடக்கையில் கண்ணில் பட்டது பாலத்துத் தூணில் ஒட்டப்பட்டக் கையகலச் சுவரொட்டி. அதைச் சுவரொட்டி என்று கூடச் சொல்ல இயலாது. சிறிய துண்டறிக்கைபோல "ரத்னா தியேட்டரில் நாளை முதல் பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள்" என அச்சிடப்பட்ட ஒருவண்ணத் தாள் அது. யாருடைய புகைப்படமும் அதில் இல்லை. ஆனால், பாரதிராசா என்ற பெயரே எங்களை நெல்லைச் சந்திப்பில் படுத்துறங்கச் செய்வதற்கும், ரத்னாவில் அலையலையாய்ப் பார்வையாளர்களை வரச் செய்வதற்கும் போதுமானதாக இருந்தது. முதல் நாள் நுழைவுச் சீட்டோடு 'காதல் ஓவியம்' என அச்சிடப்பட்டு வழங்கப்பட்டப் பேனாவை விட, 'முதல் மரியாதை'யின் வெட்டிவேரு வாசம் ஏற்படுத்தியிருந்தப் பெருந்தாக்கம் அது.
அந்தத் தாக்கத்தோடு தொண்ணூறுகளின் தொடக்கத்தில், மலையூர் மம்பட்டியான் படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவராம்தாசின் பரிந்துரையில் பாரதிராசாவிடம் உதவி இயக்குநராகத் தலைப்பட்டேன். ஆனால், வாழ்க்கைச் சக்கரம் எதிர்புறம் சுழன்றது. எப்பொழுதாவது நமக்குள்ளே நாம் தொலைந்துபோவோம். தொலைந்ததையே அறியாமல் இருக்கின்றபோது எங்கே தொலைந்தோம் என்பதைப் பட்டென்று நினைவுபடுத்தி விடுகிற காட்சிகள் அவர் படங்களில் மிகுதி. பலருக்கும் நிகழ்வதுதான் இது.
மீண்டும் தன்னை ஒரு சிறந்த இயக்குநராக அவர் நிலைநிறுத்திக் கொண்ட பொம்மலாட்டம், தனக்குப் பிடிக்காத, தன்னியல்புக்கு ஒத்துவராத கதை என்று சொல்லிக்கொண்டே 'பறவைக் கூட்டில் வாழும் மான்களை'ப் படமாக்கிய விதம் எல்லாம் வியக்கவைத்தது.
முதல்மரியாதையைப் பார்த்துவிட்டு நண்பன் உப்புக்கோட்டை எஸ்.வி.சேகரிடம் அவர் படித்த பள்ளிக்கூடத்தைப் பார்க்கவேண்டுமென்று சொல்லி தேனிக்குப் போனோம். நண்பனும் அந்தப் பள்ளியில் படித்தவன் தான். தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடகம் நிகழ்த்திய இடம், வகுப்பறை எல்லாம் பார்த்தோம். அவரது ஆசிரியர் (ஓய்வு பெற்றிருந்தார்) ஒருவரையும் பார்த்தோம்.
அவரது மறைவுச் செய்தி கேட்டது தொடங்கி ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்கையில் திகைப்பாக இருக்கிறது. எவ்வளவு உழைப்பு, உறுதி, துணிச்சல். இயக்குநராகத் தான் எண்ணியவற்றையெல்லாம் திரைக் காட்சிகளாய் நிகழ்த்திக் காட்டிய திடம். தெக்கத்தி மண்ணின் உணர்வுகளை, ஒப்பனைகளற்ற வாழ்வியலை, அவர்கள் வழக்காறுகளாலேயே காட்சிப் படிமங்களாய் மாற்றிய திறன்.
மறுபுறம் தமிழ்ச் சமூகத்தின் குரலாக, உரிமைகளுக்கான போராட்டக் களங்களில் ஒருவனாக, ஈழ விடுதலையைப் பேசிய குரலாக, திரைத்துறையில் தமிழ்க்குரலாக ஒலித்த இன்னொரு முகமும் கொண்டவன்.
எல்லாவற்றிற்கும், கீழே சிந்திய கண்ணீர்த் துளிகளும், மேலே பறந்த தோட்டாக்களும் அவரது இறுதிநாளில் சான்றாக நின்றன.
பெருவாழ்வு அவருடையது. அவர் ஆக்கிய வழித்தடங்கள் பலவுண்டு. அதில் பயணிப்போர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்தப் பாதைகளிலே நடந்து கொண்டிருப்பார்கள். அவர்களது வேறு வேறு கதைகளைக் காட்சிகளைப் பார்ப்போம். அதனுள் அவரது திரைமொழி எங்கேனும் மறைந்திருக்கும்..
ஆம். அவரால் விடை பெற்றுப் போய்விட இயலாது.

No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்